3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 21 Feb 2022 1:17 AM IST (Updated: 21 Feb 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர், 
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். 
வாக்கு எண்ணிக்கை 
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 360 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
விருதுநகர் நகராட்சிக்கு விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்கிலும், சிவகாசி மாநகராட்சிக்கு சிவகாசி அரசு கல்லூரியிலும், சாத்தூர் நகராட்சிக்கு எத்தல்ஹார்வி மேல்நிலைப்பள்ளியிலும், அருப்புக்கோட்டை நகராட்சிக்கு தேவாங்கர் கலைக் கல்லூரியிலும், ராஜபாளையம் நகராட்சிக்கு ராமசாமி ராஜா பாலிடெக்னிக்கிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு வி.பி.எம். கலைக்கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு 
 இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
 இதேபோன்று 9 பேரூராட்சிகளில் காரியாபட்டி, மல்லாங்கிணறு ஆகிய 2 பேரூராட்சிகளுக்கு மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சேத்தூர், மம்சாபுரம், எஸ்.கொடிகுளம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியிலும், செட்டியார்பட்டி, வத்திராயிருப்பு, புதுப்பட்டி, சுந்தரபாண்டியம் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 9 பேரூராட்சிகளிலும் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
கண்காணிப்பு கேமரா 
 பேரூராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
 சிவகாசி மாநகராட்சியில் நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு சிவகாசி அரசு கல்லூரி வாக்குஎண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. விருதுநகர் நகராட்சியில் அதிகாலை 3.30மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள்பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மற்று நகராட்சிகளில் நேற்று முன்தினம் இரவே வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 9 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புஅறைக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் 24 மணி நேரமும் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மேகநாதரெட்டி அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Next Story