16 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


16 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 21 Feb 2022 1:24 AM IST (Updated: 21 Feb 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 16 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 16 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 695 பதவி இடங்களுக்கு 1,514 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 16 வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன.
அதன்படி, மாநகராட்சியில் 60 வார்டுகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அம்மாபேட்டை மிலிட்டரி ரோட்டில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை, ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
நகராட்சிகள்
இதேபோல் ஆத்தூர் நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்துக்கும், நரசிங்கபுரத்துக்கு ஜெ.ஜெ.நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், மேட்டூருக்கு மாதையன் குட்டை பகுதியில் உள்ள எம்.ஏ.எம். மேல்நிலைப்பள்ளிக்கும் கொண்டு செல்லப்பட்டன.
எடப்பாடிக்கு அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், இடங்கணசாலைக்கு பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், தாரமங்கலத்துக்கு செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளிக்கும் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு அந்த அறைகளுக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.
மேலும் அயோத்தியாப்பட்டணம், கன்னங்குறிச்சி, வாழப்பாடி, பேளூர் ஆகிய பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கும், இளம்பிள்ளை, மல்லூர், ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி ஆகியவற்றுக்கு இளம்பிள்ளையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதேபோல் கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர் ஆகியவற்றுக்கு கெங்கவல்லி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும்,, ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, பூலாம்பட்டி ஆகியவற்றுக்கு ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பு
காடையாம்பட்டி, ஓமலூர், கருப்பூர், மேச்சேரி ஆகிய பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கும், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி ஆகியவற்றுக்கு தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், பி.என்.பட்டி, வீரக்கல்புதூர், கொளத்தூர் ஆகியவற்றுக்கு வைத்தீஸ்வரா மேல்நிலைப்பள்ளிக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
சங்ககிரி, கொங்கணாபுரம், தேவூர், அரசிராமணி ஆகியவற்றுக்கு சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் ஆகியவற்றுக்கு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள 16 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா மேற்பார்வையிலும், மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் மேற்பார்வையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
வாக்கு எண்ணும் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று பாதுகாப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story