3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் திறப்பு: டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்


3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் திறப்பு: டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்
x
தினத்தந்தி 21 Feb 2022 1:44 AM IST (Updated: 21 Feb 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

3 நாட்களுக்கு பின்னர் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

ஈரோடு
3 நாட்களுக்கு பின்னர் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
3 நாட்கள் விடுமுறை
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 202 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 105 டாஸ்மாக் கடைகள் பார் வசதியுடன் இயங்கி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் சாதாரண நாட்களில் தினமும் ரூ.4 கோடி வரை மது விற்பனை ஆகும். பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மாவட்டத்தில் ரூ.8 கோடி வரை மது விற்பனை நடக்கும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி கடந்த 17-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் இடங்களில் இருந்த 179 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்
முன்னதாக கடந்த 16-ந் தேதி மாலை டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் குவிந்தனர். தங்களுக்கு வேண்டிய மது பானங்களை அள்ளிச்சென்றதால் அன்றைய தினம் மது விற்பனை அமோகமாக நடந்தது. இந்த நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று காலை வழக்கம்போல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடை திறந்த உடனேயே மதுவிற்பனை சூடு பிடிக்க தொடங்கியது.
மேலும் நேற்று விடுமுறை நாள் என்பதால் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் வியாபாரமும் அமோகமாக நடந்தது. நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story