லாரி-மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் காயம்; பொதுமக்கள் மறியல்


லாரி-மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் காயம்; பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 21 Feb 2022 1:46 AM IST (Updated: 21 Feb 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

லாரி-மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் காயமடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம்:

விபத்து
திருச்சி கல்லணை சாலையில் இருந்து திருச்சி நோக்கி நேற்று மாலை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். திருவளர்ச்சோலை பனையபுரம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லாரியை பின்தொடர்ந்து வந்த காரும் லாரியின் பின்னால் மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்தவர்களை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
மேலும் விபத்தை கண்டு ஆத்திரம் அடைந்த, பொதுமக்கள் திருவளர்ச்சோலை பனையபுரம் அருகே அடிக்கடி விபத்து நடப்பதாகவும், அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் பாரதிதாசன் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி கூறினார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் கல்லணை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story