கர்நாடகத்தில் குங்குமம், ஹிஜாப்புக்கு தடை விதிக்க கூடாது - சித்தராமையா பேட்டி
கர்நாடகத்தில் குங்குமம், ஹிஜாப்புக்கு தடை விதிக்க கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
இரண்டும் நமக்கு தேவை
முஸ்லிம்கள் ஹிஜாப் அணிந்து கொள்வது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதுபோல், குங்குமம் வைத்து கொள்வதும் நமது சம்பிரதாயம். ஹிஜாப் அணிந்து வந்தால், காவி துண்டு அணிந்து வருவோம் என்று கூறுவது தான் தவறானது. இது காவி துண்டுக்கு செய்யும் அவமரியாதை ஆகும். ஏனெனில் பள்ளி, கலலூரிகளில் இதற்கு முன்பு காவி துண்டு அணிந்து யாரும் வந்ததில்லை. அது நடைமுறையிலும் இல்லை.
ஹிஜாப் அணிந்து வந்தால், காவி துண்டு அணிந்து வருவோம் என்று கூறுவது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. ஹிஜாப் அணிந்து வருவதால், யாருக்கும் தொந்தரவு ஏற்பட போவதில்லை. குங்குமம் அணிந்து வந்தாலும் யாருக்கும் தொந்தரவு ஏற்படுவதில்லை. அதனால் கர்நாடகத்தில் ஹிஜாப், குங்குமம் அணிந்து வருவதற்கு எந்த விதமான தடையும் விதிக்க கூடாது. அவை இரண்டும் நமக்கு தேவையாகும்.
போராட்டம் தொடரும்
எப்போதும் தேசபக்தி பற்றியே பா.ஜனதாவினர் பேசி வருகின்றனர். மந்திரி ஈசுவரப்பா தேசிய கொடியை அவமதித்து கருத்து தெரிவித்துள்ளார். தேசபக்தி பற்றி பேசும் பா.ஜனதாவினருக்கு, தேசிய கொடியை விட, ஒருவரின் மந்திரி பதவி பெரிதாகி விட்டது. சுதந்திர போராட்டத்தில் பா.ஜனதாவின் பங்கு இல்லாததால், அவர்களுக்கு சுதந்திரத்திற்காக போராடியவர்கள் பற்றி தெரியவில்லை.
சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதன் மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்து விட்டதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறி இருக்கிறார். பசவராஜ் பொம்மையை விட, எங்களுக்கு போராட்டம் பற்றி நல்ல அனுபவம் உள்ளது. ஈசுவரப்பாவை மந்திரி பதவியில் இருந்து நீக்கும் வரை சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் காங்கிரசின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story