கொடுமுடி அருகே பரபரப்பு: லாரி மோதி பேக்கரி உரிமையாளர் பலி; 5 மணி நேரம் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்


கொடுமுடி அருகே பரபரப்பு: லாரி மோதி பேக்கரி உரிமையாளர் பலி; 5 மணி நேரம் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Feb 2022 4:27 AM IST (Updated: 21 Feb 2022 4:27 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி அருகே லாரி மோதியதில் பேக்கரி உரிமையாளர் பலியானார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 5 மணி நேரம் பிணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடுமுடி
கொடுமுடி அருகே லாரி மோதியதில் பேக்கரி உரிமையாளர் பலியானார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 5 மணி நேரம் பிணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
பேக்கரி உரிமையாளர்
கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் வெட்டுக்காட்டூரை சேர்ந்தவர் முத்துசாமி என்கிற பிரகாஷ் (வயது 33). இவர் கொடுமுடியை அடுத்த சாலைப்புதூரில் பேக்கரி வைத்து உள்ளார். இவருக்கு மங்கையர்க்கரசி (27) என்ற மனைவியும், தர்ஷன் (3) என்ற மகனும் உள்ளனர். 
நேற்றுக்காலை சாலைப்புதூரில் இருந்து ராசாம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் அங்குள்ள கமிட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். 
சாவு
வெட்டுக்காட்டூர் அருகே சென்றபோது எதிரே வந்த லாரியும், பிரகாசின் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து பிரகாஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தார்.
விபத்து ஏற்பட்டதும், லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விபத்தில் பிரகாஷ் இறந்த தகவல் கிடைத்ததும் அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரகாசின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் விபத்து குறித்த சம்பவம் ராசாம்பாளையம் பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சம்பவ இடத்துக்கு வந்தனர்.
சாலை மறியல்
பின்னர் அவர்கள் அனைவரும் பகல் 11 மணி அளவில் பிணத்துடன் அங்குள்ள ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த கமிட்டி ரோடு மிகவும் குறுகலான ரோடு. கரூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக கனரக வாகனங்களால் அடிக்கடி கமிட்டி ரோட்டில் விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. மேலும் இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் வருவதால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் போன்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதுகுறித்து நாங்கள் மாவட்ட கலெக்டரிடமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்து உள்ளோம். அப்போது குறுகலான இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது. சாலையை விரிவாக்கம் செய்த பிறகு கனரக வாகனங்களை அனுமதிக்கலாம்.’ என்றனர். 
பரபரப்பு
அதற்கு பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை தற்காலிகமாக அந்த ரோட்டில் கனரக வாகனங்களை அனுமதிப்பதில்லை எனவும்,’ தெரிவிக்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மற்றும் பிரகாசின் உறவினர்கள் மாலை 4 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து பிரகாசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொடுமுடி அருகே 5 மணி நேரம் ரோட்டில் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story