திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை: காய்கறி வாகனங்களை அனுமதிக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் காய்கறி வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் காய்கறி வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இது இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்துக்கு தடை
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது திம்பம் மலைப்பாதையை கடந்து செல்வது உண்டு. அவ்வாறு செல்லும் வனவிலங்குகள், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்தன.
இதை கருத்தில் கொண்டு திம்பம் மலைப்பாதையில் கடந்த 10-ந் தேதி முதல் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
முக்கிய தொழில்
இதுகுறித்து தாளவாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் முக்கிய தொழிலே விவசாயம் தான். இதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், கொள்ளேகால், குண்டல்பேட் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.
எனவே தாளவாடி மற்றும் அதன் எல்லையில் உள்ள கர்நாடக மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களான தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றை வாகனங்கள் மூலம் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம், கோபி, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் காய்கறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக சாம்ராஜ் நகர், கொள்ளேகால், குண்டல்பேட் பகுதிகளில் இருந்து தமிழக பகுதிகளுக்கு அனுப்பப்படும் காய்கறி வாகனங்கள் தாளவாடியை அடுத்த காரப்பள்ளம் சோதனை சாவடியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
விவசாயிகளுக்கு நஷ்டம்
இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் உரிய இடத்தில் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் காலம் கடந்து காய்கறிகளை விற்பனை செய்வதால், அதற்கு உரிய விலையும் கிடைப்பதில்லை. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதன்காரணமாக எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே அத்தியாவசிய பொருளான காய்கறி ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களையும் (லாரி தவிர) திம்பம் மலைப்பாதையில் இரவு 10 மணி வரை செல்ல அனுமதி அளிக்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story