தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம், மது பாட்டில், மூக்குத்தி பறிமுதல் - 20 பேர் மீது வழக்கு
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம், மது பாடில்கள் மற்றும் தங்க மூக்குத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. மேலும் திருவள்ளூர் டவுன் போலீசார் திருவள்ளூர் தேவி மீனாட்சி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு திருவள்ளூர் நகர்மன்ற தேர்தலில் 20-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரான எஸ்.ஏ.நேசன் என்கின்ற அற்புத நேசன் மற்றும் அவருடன் இருந்த சசிகுமார், காளிதாஸ், வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் மது பாட்டில்களை கொண்டு சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்து அவர்களிடம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ.நேசன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல் திருவள்ளூர் டவுன் போலீசார் திருவள்ளூர் பெரியபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 3-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சுமித்ரா அவரது கணவர் வெங்கடேசன் மற்றும் அந்தபகுதியை சேர்ந்த பாரி, ராகுல் உள்ளிட்ட 10 பேருடன் வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்தியை கொடுத்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பயன்படுத்தப்பட்ட 14 தங்க மூக்குத்தியை போலீசார் கைப்பற்றினார்கள்.
இது சம்பந்தமாக அ.தி.மு.க. 3-வது வார்டு வேட்பாளர் சுமித்ரா அவரது கணவர் வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story