கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடக்கம்


கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2022 5:26 AM IST (Updated: 21 Feb 2022 5:26 AM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த கிருஷ்ணா நதி நீர் கால்வாயின் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரம், தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அதாவது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் உள்ளது.

இந்த நிலையில் கடந்த வருடம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்ததால் தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா நதி கால்வாயில் பல இடங்களில் சேதம் அடைந்தது.

இதனையடுத்து சேதமடைந்த கால்வாயை சீரமைக்க தமிழக அரசு ரூ.24 கோடி நிதி ஒதுக்கியது. முதல் கட்டமாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கர்நகர் பகுதியில் இருந்து ஆலப்பாக்கம் வரை 6.20 கிலோ மீட்டர் தூரம் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டன.

மேலும் டிசம்பர் மாதம் இறுதியில் இரண்டு நாட்கள் கொட்டித் தீர்த்த மழையால் கிருஷ்ணா நதி கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் கால்வாய் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Next Story