2 ஆயிரம் ‘ஆலிவர் ரெட்லி’ ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கொள்ளிடம் அருகே 2 ஆயிரம் ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
கொள்ளிடம்:-
கொள்ளிடம் அருகே 2 ஆயிரம் ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
ஆமை குஞ்சுகள் பொரிப்பகம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூழையார் கொட்டாயமேடு கிராமத்தில் வனத்துறை சார்பில் ஆமை குஞ்சுகள் பொரிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆமை முட்டைகள் பாதுகாக்கப்பட்டு குஞ்சு பொரித்த பின்னர் அவை கடலில் விடப்பட்டு வருகிறது.
இங்கு பராமரிக்கப்பட்ட 2 ஆயிரம் ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது சீர்காழி வனசரகர் ஜோசப் டேனியல் கூறியதாவது:-
ஆலிவர் ரெட்லி ஆமைகள் அரியவகை ஆமை இனமாகும். இவை பசுபிக் பெருங்கடல் பகுதியில் அதிகமாக காணப்படும். இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்துக்காக தமிழக கடற்கரை பகுதிக்கு வருகின்றன.
கடலில் விடப்பட்டன
இந்த ஆமைகள் ஒவ்வொன்றும் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும். கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படும்.
இந்த ஆண்டு கூழையார் கடல் பகுதியில் ஆமைகள் இட்ட 2,000 முட்டைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இதில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டு உள்ளன. பொதுவாக ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்ட நாளில் இருந்து 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் இனப்பெருக்கத்துக்காக இதே கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது வன அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story