திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் வாக்கு எண்ணிக்கை


திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 21 Feb 2022 6:51 PM IST (Updated: 21 Feb 2022 6:51 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 11 மையங்களில் இன்று நடக்கிறது.

திண்டுக்கல்:

வாக்குப்பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 478 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. அன்றைய தினம் 737 வாக்குச்சாவடிகளில் 894 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளில் மொத்தம் 6 லட்சத்து 12 ஆயிரத்து 926 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 52 பேர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டன. 

பின்னர் வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெறப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 11 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 

திண்டுக்கல் மாநகராட்சியின் வாக்குப்பதிவு எந்திரங்கள், திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

வாக்கு எண்ணும் மையங்கள்

இதேபோல் பழனி நகராட்சி மற்றும் ஆயக்குடி, பாலசமுத்திரம், கீரனூர், நெய்க்காரப்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியிலும், ஒட்டன்சத்திரம் நகராட்சியின் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை ஆகிய 4 பேரூராட்சிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் பிள்ளையார்நத்தம் அம்மன் கலை கல்லூரியிலும், அகரம், தாடிக்கொம்பு, வேடசந்தூர் ஆகிய 3 பேரூராட்சிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வேடசந்தூர் பி.வி.எம். மெட்ரிக் பள்ளியிலும், பாளையம், எரியோடு ஆகிய 2 பேரூராட்சிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் குஜிலியம்பாறை சி.சி.சி.குவாரி ராணிமெய்யம்மை பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கின்றன.

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

வடமதுரை, அய்யலூர் ஆகிய 2 பேரூராட்சிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.பொறியியல் கல்லூரியிலும், நத்தம் பேரூராட்சியின் வாக்குப்பதிவு எந்திரங்கள் நத்தம் துரைக்கமலம் பள்ளியிலும் வைக்கப்பட்டு உள்ளன. 
நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் ஆகிய 2 பேரூராட்சிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் நிலக்கோட்டை அரசு பெண்கள் கலைக்கல்லூரியிலும், அய்யம்பாளையம், வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. ஆண்கள் பள்ளியிலும், கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சியின் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொடைக்கானல் அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளன. 

மேற்கண்ட 11 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை

திண்டுக்கல் மாநகராட்சியை கைப்பற்றுவதில் தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்டம் முழுவதும் 11 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்வது, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளை தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story