வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை


வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Feb 2022 7:36 PM IST (Updated: 21 Feb 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

வாணியம்பாடி

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை  வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அமர்குஷ்வாஹா, மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.பிரதீப் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் கலெக்டர் அமர் குஷ்வாகா நிருபர்களிடம் கூறியதாவது:-

செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது, பின்னர் மின்னணு வாக்குப்பதிரு எந்திரங்களில் பதிவான  வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முடிவு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிவிக்கப்படும். இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 286 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர். 

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், அவரது முகவர்கள் ஆகியோருக்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பாதைகள் வழியாகத்தான் வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் உள்ளே கொண்டுவர அனுமதி இல்லை. அவ்வாறு கொண்டு வந்தால் அவற்றை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போலி தங்க நாணயம்

வாகனங்கள் அனைத்தும் 200 மீட்டர் தூரத்தில் நிறுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். அங்குதான் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
ஆம்பூரில் வாக்காளர்களுக்கு போலி தங்க நாணயம் கொடுத்து வாக்குகள் பெற்றதாக கூறப்படுவது குறித்து காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து  விசாரணை அறிக்கை வந்த பின்னர் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.

 இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராஜூ, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ் பாண்டியன், சாந்தலிங்கம், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், தாசில்தார் சம்பத், நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின்பாபு, பழனி, ஷகிலா, நகராட்சி பொறியாளர்கள் ராஜேந்திரன், சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story