நெல் கொள்முதல் பணி தற்காலிகமாக நிறுத்தம்


நெல் கொள்முதல் பணி தற்காலிகமாக நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Feb 2022 9:32 PM IST (Updated: 21 Feb 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே மேலப்பூதனூர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கொள்முதல் செய்ததால் நெல் கொள்முதல் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

திட்டச்சேரி:
திருமருகல் அருகே மேலப்பூதனூர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கொள்முதல் செய்ததால் நெல் கொள்முதல்  பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நெல் கொள்முதல் நிலையம்
 திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் அதிக அளவில் வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் அருண் தம்புராஜ் நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் தவறுகளை சரிசெய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் தமிழ்நாடு நெல் கொள்முதல் நிலைய அலுவலக உதவியாளர் சுப்புரத்தினம், கொள்முதல் இயக்க துணை மேலாளர் ரங்கநாதன், கொள்முதல் தரக்கட்டுப்பாடு அலுவலர் சீனிவாசன் ஆகியோர்  மேலப்பூதனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு  வந்து ஆய்வு செய்தனர்.
கொள்முதல் பணி நிறுத்தி வைப்பு
இந்த ஆய்வில் அரசு நிர்ணயித்த படி 40 கிலோ 650 கிராம் எடைக்கு மாறாக 42 கிலோ வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் அளவைவிட அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இதனால் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
 துறை சார்ந்த தவறுகள் சரி செய்யப்பட்டு, நெல் கொள்முதல் பணி வழக்கம்போல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி தனபாலன் கூறியதாவது:-
தகராறு
மேலப்பூதனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மற்றும் நெல் வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  அந்த ஆய்வின் போது 40 கிலோ 650 கிராம் தான் ஒரு மூட்டை எடை இருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக 42 கிலோ 200 கிராம் என அதிக எடை கொண்டு கொள்முதல் செய்யப்பட்டது தெரியவந்துள்ளத.
 இந்த ‍ கொள்முதல் நிலையத்தில்  வரிசை படி கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் விருப்பப்படி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படுவது குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story