மக்காச்சோளம் பயிரை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்


மக்காச்சோளம் பயிரை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2022 9:41 PM IST (Updated: 21 Feb 2022 9:41 PM IST)
t-max-icont-min-icon

மக்காச்சோளம் பயிரை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்


மூங்கில்துறைப்பட்டு

விவசாயிகள் கோரிக்கை

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். ஆனால் படைப்புழு தாக்குதலால் பயிர் வளர்ச்சி இன்றி காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். மேலும் படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 
இந்த நிலையில் சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமையில், துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர் நாசர் ஆகியோரை கொண்ட குழுவினர் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூர் கிராமத்தில் உள்ள விவசாயியின் நிலத்தில் படைப்புழு தாக்கிய மக்காச்சோளம் பயிரை ஆய்வு செய்தனர்.

கட்டுப்படுத்தும் முறைகள்

பின்னர் படைப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண் உதவி இயக்குனர் புஷ்பராணி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அவர் கூறும்போது, மக்காச்சோளம் பயிரிட்ட பிறகு 7-வது நாள் வேப்ப எண்ணையை தண்ணீரில் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும். 15 முதல் 20 நாட்களுக்கு மேல் மெட்டாரைசியம் சோபியா என்ற உயிரியல் காரணியை ஏக்கருக்கு 4 கிலோ வீதம் தெளிக்க வேண்டும். மேலும் எமாமெக்டின் அள்ளது தயோடிகால் இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில் ஒரு முறை தெளித்தும் குருத்துப் பகுதிகளில் மணல் அல்லது சாம்பல் இட்டும் ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் வைத்தும் படைப்புழு தாக்குவதை கட்டுப்படுத்தலாம் என்றார். ஆய்வின் போது துணை வேளாண்மை அலுவலர் காசி உதவி வேளாண்மை அலுவலர் நாசர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story