கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்தக்கோரி விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்
கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்தக்கோரி விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்
பல்லடம்:
அரசு அறிவித்த கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்தக்கோரி விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
கோரிக்கை
கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்த வேண்டும், கூலி உயர்வு பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை நால் ரோட்டில் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, கோவை திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
காலவரையற்ற வேலை நிறுத்தம்
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கடந்த 24.11.2021 அன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்லடம் ரகத்திற்கு 20 சதவீதமும், சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதமும் கூலி உயர்வு செய்து அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் அந்த கூலி உயர்வை அமல்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து பல்லடம், சோமனூர், அவினாசி, மங்கலம், தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், வேலம்பாளையம், கண்ணம்பாளையம் என 9 சங்கங்களும் இணைந்து போராட்டத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து சென்றன.
கூலி உயர்வு
இதற்கிடையே கடந்த 16-ந்தேதி அமைச்சர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சோமனூருக்கு 19 சதவீதம், இதர ரகத்துக்கு 15 சதவீத கூலி உயர்வு என்ற ஒப்பந்தத்தை ஏற்று பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், கண்ணம்பாளையம் சங்கங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றன. இதனிடையே பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கவில்லை என்றும், கையெழுத்து வடிவில் ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என சோமனூர் சங்கம் அறிவித்தது.
கையெழுத்து வடிவில் ஒப்பந்தம்
இதேபோல் அவினாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லுார் சங்கங்களும், சோமனூர் சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறது. ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த காலங்களில் இதேபோல் கூலியை உயர்த்தி தருவதாக கூறி இழுத்தடித்துள்ளனர். அதுபோல இந்த முறையும் கூலி உயர்வை வழங்குவார்களா என்பது சந்தேகமே.
எனவே கையெழுத்து வடிவிலான ஒப்பந்தம் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது. 5 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் இன்று (நேற்று) முதல் வருகிற 25-ந்தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story