நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடக்கிறது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 4 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடக்கிறது
கள்ளக்குறிச்சி
141 பதவிகளுக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 நகராட்சிகள், சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 141 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 185 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 522 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 551 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
வாக்கு எண்ணிக்கை
ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைத்து அந்தந்த பகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள வைப்பறையில் வைத்து சீல் வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் 4 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.
4 இடங்களில் நடக்கிறது
இதில் கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் பாரதி மகளிர் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும், சின்னசேலம், வடக்கனந்தல் ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மேலூர் டி.எஸ்.எம்.ஜெயின் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும் இன்று நடக்கிறது.
அதேபோல் உளுந்தூர்பேட்டை நகராட்சி மற்றும் தியாகதுருகம் பேரூராட்சி ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்திலும், திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் மணலூர்பேட்டை பேரூராட்சி ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை திருக்கோவிலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும் இன்று நடக்கிறது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story