தமிழ் புலிகள் கட்சியினர் நூதன போராட்டம்


தமிழ் புலிகள் கட்சியினர் நூதன போராட்டம்
x

கோவில்பட்டியில் தமிழ் புலிகள் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி:
தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கொல்லி பானைகளுடன் முற்றுகையிட்டு நூதன போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விளாத்திகுளம் தாலுகா மெட்டில்பட்டி கிராமத்தில் பட்டியல் சாதி அருந்ததியர் மக்கள் 5 தலைமுறையாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனி மயானம், நிழற்குடை, மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி அமைத்து தரக்கோரி ஏற்கனவே மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மயான வசதி இல்லாததால் திறந்தவெளியில் இறந்தவர்கள் உடலை எரியூட்டி வருகிறோம். எனவே மெட்டில்பட்டி கிராமத்தில் பட்டியல் சாதி அருந்ததியர் மக்களுக்கு மயானம் அமைத்து நிழற்குடை, தண்ணீர் வசதி, சுற்றுச்சுவர், சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

இந்த போராட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் பீமாராவ், செய்தி தொடர்பாளர் கனியமுதன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டி, மெட்டில்பட்டி முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் பாண்டி, இளம் புலிகள் அணி மாவட்ட செயலாளர் தமிழரசு, ஜெய்பீம் தொழிலாளர் நலச் சங்க தலைவர் செண்பகராஜ் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.




Next Story