சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் துர்கா ஸ்டாலின் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
திருவெண்காடு:-
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. காசிக்கு இணையான 6 தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவில், ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோரமுகத்துடன் இங்கு அகோரமூர்த்தி தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.
இங்கு சிவனின் கண்களில் இருந்து 3 தீப்பொறிகள் விழுந்த இடத்தில் சூரியன், சந்திரன், அக்னி என்ற பெயரில் 3 குளங்கள் அமைந்துள்ளன. படைப்பு கடவுளான பிரம்மா தனது மூச்சை அடக்கி இந்த கோவிலில் தியானம் செய்து வருவதாக ஐதீகம்.
இந்திர திருவிழா
பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ‘இந்திர திருவிழா’ நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ‘இந்திர திருவிழா’ கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 10 மணி அளவில் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் சசிகுமார், திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் பஞ்சுகுமார், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் துரைராஜன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரில் எழுந்தருளிய பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
தேரோட்டத்தை முன்னிட்டு திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பூம்புகார் தீயணைப்பு நிலைய அலுவலர் துரைமுருகன் மற்றும் தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அன்னதானம்
தேரோட்டத்தையொட்டி துர்கா ஸ்டாலின், திருவெண்காட்டில் உள்ள தனது வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
Related Tags :
Next Story