இளம்பெண்ணை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


இளம்பெண்ணை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2022 10:34 PM IST (Updated: 21 Feb 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

அவினாசி:
அவினாசி அருகே காதலனுடன் தனியாக பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
காதலனுடன் பேசிக்கொண்டிருந்தார்
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் தனியாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவினாசி போலீஸ் நிலைய போலீஸ்காரர் சுப்பிரமணியம், அவர்களிடம் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டார். பின்னர் அந்த மாணவியின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு அவர்களை எச்சரித்து அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து அவர் செல்போனில் அந்த மாணவியை தொடர்பு கொண்டு, உங்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
இதையடுத்து அந்தப் பெண்ணின் தாயார், மாணவியைப் போல் போலீஸ்காரரிடம் செல்போனில் பேசி வெள்ளியம்பாளையம் குட்டை பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து அவர் அங்கு சென்றார். அங்கு மறைந்திருந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் போலீஸ்காரரை பிடித்து போலீஸ்காரராகிய நீங்களே இப்படி செய்யலாமா என்று கேட்டுள்ளனர்.
இதில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் அவரை விடாமல் விரட்டி தாக்கியுள்ளனர்.
சாலை மறியல் செய்ய முயற்சி
தகவலறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 மேலும் இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே போலீஸ்காரரை கண்டித்து வெள்ளியம்பாளையம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து போலீஸ்காரர் சுப்பிரமணியத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதனிடையே போலீஸ்காரர் சுப்பிரமணியம் கொடுத்த புகாரின் பேரில் அவரை தாக்கிய மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம்   சமூக வலைதளங்களிலும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story