கார்கள், சுற்றுலா வேன் மோதல் ஆசிரியர் உள்பட 4 பேர் பலி
ஆண்டிப்பட்டி அருகே கார்கள், சுற்றுலா வேன் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஆசிரியர் உள்பட 4 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கார்கள், சுற்றுலா வேன் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஆசிரியர் உள்பட 4 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கார்கள் மோதல்
மதுரை மாவட்டம் செக்கானூரணியை சேர்ந்தவர்கள் சிவபாண்டி (வயது 48), செல்வம் (55), பாண்டியராஜன் (44). இவர்கள், தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று காரில் சென்றனர். அந்த காரை, மதுரையை அடுத்த நாகமலைப்புதுக்கோட்டையை சேர்ந்த முருகபிரபு (44) என்பவர் ஓட்டினார்.
பின்னர் அவர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அங்கிருந்து ஆண்டிப்பட்டி வழியாக செக்கானூரணி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். மதுரை-தேனி நெடுஞ்சாலையில் ஆண்டிப்பட்டி கணவாய், திம்மரசநாயக்கனூர் விலக்கு அருகே மாலை 5 மணி அளவில் அவர்கள் கார் வந்தது. எதிரே மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டி நோக்கி மற்றொரு காரும், சுற்றுலா வேனும் அடுத்தடுத்து வந்தன.
இந்தநிலையில் சிவபாண்டி உள்பட 4 பேர் வந்த கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய மற்றொரு கார் சாலையோர தடுப்பில் மோதி நின்றது. பின்னர் தாறுமாறாக ஓடிய கார், எதிரே வந்த சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது.
கார்கள், வேன் அடுத்தடுத்து மோதிய இந்த விபத்து, கண்இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. இதில், 2 கார்கள் அப்பளம்போல் நொறுங்கியது. சுற்றுலா வேனின் முன்பகுதி உருக்குலைந்தது.
4 பேர் பலி
இந்த விபத்தில் கார்கள் மற்றும் சுற்றுலா வேனில் வந்தவர்கள் படுகாயம் அடைந்து அபயகுரல் எழுப்பினர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், பொதுமக்களுடன் சேர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதற்கிடையே காரை ஓட்டி வந்த முருகபிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் சிவபாண்டி (48), செல்வம் (55) ஆகியோர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பாண்டியராஜன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொரு காரில் வந்த ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (35), அவரது மனைவி ஆனந்த மீனாட்சி (34) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இறந்தார். அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ராமச்சந்திரன், பெரியகுளத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
10 பேர் படுகாயம்
இதேபோல் சுற்றுலா வேனில் வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சந்திரமதி (56), ரஜிதா (36), சதி (61), நிஜி (33), விருந்தா (27), அஜேஸ் (34), இவரது குழந்தை ஆர்ஜவ் (1), அஜில் (26), அபிலாஷ் (35), மோகனன் (60) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக, தேனி-மதுரை நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
கார்கள், சுற்றுலா வேன் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் ஆண்டிப்பட்டி மற்றும் செக்கானூரணி பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story