நடைபயிற்சிக்கு சென்ற பெண்கள் மீது தாக்குதல்: 3 சிறுவர்கள் கைது


நடைபயிற்சிக்கு சென்ற பெண்கள் மீது தாக்குதல்: 3 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 21 Feb 2022 10:40 PM IST (Updated: 21 Feb 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

பொம்மிடி அருகே நடைபயிற்சிக்கு சென்ற பெண்களை தாக்கிய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

பொம்மிடி:
பெண்கள் மீது தாக்குதல்
பொம்மிடி அருகே உள்ள புது ஓட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமரன். கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 40). இவர் நேற்று முன்தினம் மாலை பண்டாரசெட்டிப்பட்டி பகுதியில் விவசாய நிலம் அருகே உறவினர் கவிதா (34) என்பவருடன் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த சிறுவர்கள் சிலர் புவனேஸ்வரி, கவிதாவை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த சிறுவர்கள், அவர்கள் 2 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த குமரனையும் அவர்கள் தாக்கினர். 
சாலை மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்த குமரன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், பா.ம.க.வினர் இரவில், பொம்மிடி ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த கடைகளும் அடைக்கப்பட்டன.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பெனசிர் பாத்திமா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த குமரன் தரப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
3 சிறுவர்கள் கைது
இதையடுத்து புவனேஸ்வரி பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் புவனேஸ்வரி, கவிதா, குமரன் ஆகியோரை தாக்கியது பண்டாரசெட்டிப்பட்டியை சேர்ந்த 5 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய 3 சிறுவர்களை கைது செய்தனர். 
அவர்களை பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்தனர். மேலும், 2 சிறுவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story