கடலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பாதுகாப்பு வழங்காமல் கோவில் விழாவை நிறுத்திய போலீசாரை கண்டித்து, கடலூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் அடுத்த செம்மங்குப்பம் காலனியில் 130 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், அங்குள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 16-ந் தேதி மாசி மக விழாவை நடத்த முடிவு செய்திருந்தனர். மேலும் மாரியம்மனை ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டு சென்று தீர்த்தவாரி நடத்தவும் தயார் நிலையில் இருந்தனர். அப்போது கிராம பகுதியை சேர்ந்த சிலர், தங்கள் பகுதி வழியாக சாமியை கொண்டு செல்லக்கூடாது என்றும், மீறி கொண்டு சென்றால் தகராறில் ஈடுபடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.
இதுபற்றி போலீஸ் நிலையத்திலும், தாசில்தாரிடமும் காலனி மக்கள் புகார் அளித்தனர். அதற்கு அதிகாரிகள், கிராம மக்களுக்கு சாதகமாக சாமியை பொது வழிப்பாதை வழியாக கொண்டு செல்லாமல் சுடுகாட்டு பாதை வழியாக கொண்டு செல்லுங்கள், இல்லையெனில் கோவில் விழாவை நிறுத்துங்கள் என கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
இந்த நிலையில் செம்மங்குப்பம் காலனி பகுதி பொதுமக்கள், நேற்று காலை வக்கீல் திருமேனி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், கோவில் விழாவை நடத்த உரிய பாதுகாப்பு அளிக்காமல் கிராம மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விழாவை நிறுத்திய போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், யாரேனும் 5 பேர் மட்டும் கலெக்டரிடம் சென்று மனு அளிக்கும்படியும், அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் முக்கியஸ்தர்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளித்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story