21 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் வெற்றி வாகை சூடப்போவது யார்?


21 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் வெற்றி வாகை சூடப்போவது யார்?
x
தினத்தந்தி 21 Feb 2022 10:53 PM IST (Updated: 21 Feb 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 21 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 9 மையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. இதில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்பது தெரிந்து விடும்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடந்தது. 

63 சதவீத வாக்குப்பதிவு

இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 284 வாக்குகளும், கோவில்பட்டி நகராட்சியில் 47 ஆயிரத்து 985 வாக்குகளும், காயல்பட்டினம் நகராட்சியில் 22 ஆயிரத்து 523 வாக்குகளும், திருச்செந்தூர் நகராட்சியில் 20 ஆயிரத்து 243 வாக்குகளும், 17 பேரூராட்சிகளிலும் மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 394 வாக்குகளும் பதிவாகி இருந்தன. 

மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 572 ஆண்களும், 2 லட்சத்து 11 ஆயிரத்து 516 பெண்களும், 21 திருநங்கைகளும் என மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 109 பேர் வாக்களித்து உள்ளனர். இது 63.81 சதவீதம் ஆகும்.

9 மையங்கள்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஓட்டுகள் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன. அதேபோன்று திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள், ஆறுமுகநேரி, ஆத்தூர், கானம் பேரூராட்சிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளிக்கும், ஸ்ரீவைகுண்டம், ஏரல், பெருங்குளம், சாயர்புரம் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் சாயர்புரம் போப்ஸ் கல்லூரிக்கும், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை பேரூராட்சி வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளிக்கும், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத் ஆகிய பேரூராட்சி வாக்குப்பதிவு எந்திரங்கள் நாசரேத் பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலைப்பள்ளிக்கும், கோவில்பட்டி நகராட்சி வாக்குப்பதிவு எந்திரங்கள் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், கழுகுமலை பேரூராட்சி வாக்குப்பதிவு எந்திரங்கள் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், கயத்தாறு பேரூராட்சி வாக்குப்பதிவு எந்திரங்கள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மேல்நிலைப்பள்ளிக்கும், விளாத்திகுளம், எட்டயபுரம், வி.புதூர் பேரூராட்சி வாக்குப்பதிவு எந்திரங்கள் எட்டயபுரம் பாரதியார் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த 9 வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 14 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 40 இன்ஸ்பெக்டர்கள், 230 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இன்று ஓட்டு எண்ணிக்கை

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளின் ஓட்டுகளை எண்ணுவதற்கு 2 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு அறையில் 30 வார்டுகளின் வாக்குகளும், மற்றொரு அறையில் 30 வார்டுகளின் வாக்குகளும் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு அறையிலும் 15 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுகின்றனர்.

வாக்கு எண்ணிக்கைக்காக தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு சுழற்சி முறையில் வாக்கு எண்ணிக்கை மேஜைகள் ஒதுக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவில் 21 உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி வாகை சூடப்போவது யார்? என்பது தெரிந்து விடும். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.




Next Story