காலாவதியான குளிர்பானங்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்
ஆண்டிப்பட்டி பகுதியில் காலாவதியான குளிர்பானங்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி:
தமிழக உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் மாநிலம் முழுவதும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனையை தடுக்க சிறப்பு ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையிலும், தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அறிவுறுத்தலின்பேரிலும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராகவன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆண்டிப்பட்டி பஸ் நிலையம், கடைவீதி மற்றும் தேனி சாலையில் அமைந்துள்ள கடைகள், சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதேபோல் ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள், சாலையோர கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக காலாவதியான சுமார் 300 லிட்டர் குளிர்பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காலாவதியான குளிர்பானங்கள் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story