தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு
திருவாரூர் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்தார்.
திருவாரூர்;
திருவாரூர் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்தார்.
உள்ளாட்சி தேர்தல்
திருவாரூர் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 30 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவிற்காக 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
திருவாரூர் நகராட்சியில் மொத்த வாக்காளர்கள் 50 ஆயிரத்து 419 பேர் உள்ளனர். இதில் 15 ஆயிரத்து 599 ஆண் வாக்காளர்கள், 17 ஆயிரத்து 435 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 33 ஆயிரத்து 34 பேர் வாக்களித்தனர். இது 65.52 சதவீத வாக்குப்பதிவு ஆகும். இதைத்தொடர்ந்து மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை
அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் தலைமையில் 4 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 6 கண்காணிப்பாளர்கள், 6 வாக்கு எண்ணும் உதவியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கைக்கு 6 மேஜைகள் போட்டு 6 வார்டுகள் வீதம் 5 சுற்றுகள் என மொத்தம் 30 வார்டுகளுக்கு வாக்குகள் எண்ணப்படுகிறது.
மேலும் பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் மேற்பார்வையில் 76 போலீசார் வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மன்னார்குடி
மன்னார்குடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு 142 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 62 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 41 ஆயிரத்து 327 வாக்குகள் பதிவாகின. 68 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குகள் எண்ணும் மையமான பின்லே மேல்நிலைப்பள்ளியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ஒரு சுற்றுக்கு 7 வார்டுகள் என மொத்தம் 5 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர், துணை தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்ட மொத்தம் 29 பேர் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் பின்லே மேல்நிலைப்பள்ளியில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்தர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story