வாக்கு எண்ணிக்கையை அமைதியான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை அமைதியான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் மோகன் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மோகன் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான 208 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 457 ஆண் வேட்பாளர்களும், 478 பெண் வேட்பாளர்களும் என மொத்தம் 935 பேர் போட்டியிட்டனர். தேர்தலுக்கான வாக்குப்பதிவு 346 வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் நடைபெற்றது. இத்தேர்தலில் 2,15,553 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதன் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 72.39 ஆகும். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக மரக்காணம் பேரூராட்சியில் 85.62 சதவீத வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக விழுப்புரம் நகராட்சியில் 65.46 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
ரூ.41¼ லட்சம் பறிமுதல்
மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலை தடுக்கும் வகையில் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது. இதன் மூலம் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.8,92,016 மதிப்புள்ள மதுபானங்கள் உள்ளிட்ட ரூ.41 லட்சத்து 85 ஆயிரத்து 822 மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 65 பதற்றமான மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு இணையதள வசதி மூலம் வாக்குப்பதிவு முழுவதும் மாவட்டம் மற்றும் மாநில அளவில் கண்காணிக்கப்பட்டது. மீதமுள்ள 281 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு ஆவணமாக வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வாக்குப்பதிவு ஆவணங்களும் சம்பந்தப்பட்ட 10 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைத்து சி.சி.டி.வி. மற்றும் காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (அதாவது இன்று) காலை 8 மணியளவில் எண்ணப்படுகிறது. இதற்காக 10 வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 40 மேஜைகள் போடப்பட்டு அதன் மூலம் 101 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணியை கண்காணித்திட 7 இணை இயக்குனர் நிலையிலான அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 3 நுண் பார்வையாளர்கள் வீதம் வங்கிகளில் பணிபுரியும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. மூலம் வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னேற்பாடுகள் தயார்
மேலும் தபால் வாக்குகள் பெற்ற அலுவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை நாளை (அதாவது இன்று) காலை 8 மணிக்குள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்படும் பெட்டியில் செலுத்திட வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் வேட்பாளர்கள், முகவர்களின் முன்னிலையில் தபால் வாக்கு பெட்டிகளின் சீல் அகற்றப்பட்டு வார்டு வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கும் பணி நடைபெறும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அடங்கிய பெட்டிகளின் சீல் அகற்றப்பட்டு அதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பணிகள் மிகவும் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதற்கும், இப்பணியை அமைதியான முறையில் நடத்தவும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறுகையில், வாக்கு எண்ணிக்கை பணிக்காக 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது என்றார்.
ஆய்வு
இதையடுத்து கலெக்டர் மோகன், விழுப்புரம் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது எந்தவித சட்டம்- ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடப்பதற்கு பாதுகாப்பை பலப்படுத்தும்படி அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்திரஷா, துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story