மின்சாரம் தாக்கி 3 பசுமாடுகள் சாவு
கொரடாச்சேரி அருகே மின்சாரம் தாக்கி 3 பசுமாடுகள் உயிரிழந்தன.
கொரடாச்சேரி;
கொரடாச்சேரி அருகே மின்சாரம் தாக்கி 3 பசுமாடுகள் உயிரிழந்தன.
மின்சாரம் தாக்கியது
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தேவர்கண்டநல்லூர் அருகே உள்ள நாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன். விவசாயியான இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது மாட்டை அங்குள்ள ஒரு வயல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.
இதைப்போல அதே ஊரைச் சேர்ந்த சுதா மற்றும் ராஜாத்தி ஆகியோரும் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பியுள்ளனர். வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன. அப்போது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பி மீது மாடுகளின் உடல் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி 3 பசுமாடுகளும் உயிரிழந்தன.
நஷ்ட ஈடு
இது குறித்து கலையரசன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த 3 மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
தாழ்வாக செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை சரி செய்து ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என பொதுமக்கள் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாடுகளை இழந்த அதன் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story