கைதிகளின் மனநிலையை புரிந்து நல்ல மனிதனாக மாற்ற வேண்டும். வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா பேச்சு
கைதிகளின் மனநிலையை புரிந்து அவர்களை சீர்திருத்தி நல்ல மனிதனாக மாற்ற வேண்டும் என்று ஜெயில் காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறினார்.
வேலூர்
கைதிகளின் மனநிலையை புரிந்து அவர்களை சீர்திருத்தி நல்ல மனிதனாக மாற்ற வேண்டும் என்று ஜெயில் காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறினார்.
புத்தாக்க பயிற்சி
தமிழகத்தில் உள்ள ஜெயில்களில் பணியாற்றும் 160 ஜெயில் காவலர்களுக்கு 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி வேலூர் ஜெயில் காவலர் பயிற்சி பள்ளியில் நேற்று தொடங்கியது. இதையொட்டி நடந்த விழாவுக்கு வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாமரைகண்ணன் தலைமை தாங்கினார். ஆப்கா இயக்குனர் சந்திரசேகர், துணை இயக்குனர் கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி வரவேற்று பேசினார்.
வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
சமூக சூழ்நிலை மற்றும் குடும்பசூழல் காரணமாக பலர் குற்றங்கள் புரிந்து ஜெயிலுக்கு வருகிறார்கள். அவர்களை குற்றவாளி என்று கூற முடியாது. வாழ்க்கைக்கு படிப்பு என்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் பயிற்சியும் முக்கியம்.
தொடர்ந்து பயிற்சி வழங்குவதால் மட்டுமே பணிபுரியும் துறையில் சாதிக்க முடியும். அதீத நம்பிக்கையும் தவறுக்கு வழிவகுக்கும்.
கைதிகளின் மனநிலையை புரிந்து...
ஜெயிலுக்கு உள்ளே நீங்கள், ஜெயிலுக்கு வெளியே சீருடை பணியாளர்களான நாங்கள் என்று அனைவரும் நமது கடமையை சரியாக செய்தால் மட்டுமே பொதுமக்கள் அச்சமின்றி வாழமுடியும். கைதிகளின் மனநிலையை அவர்களின் அருகே இருந்து நீங்கள் பார்க்கிறீர்கள். தவறு செய்யும் குழந்தைகளை பெற்றோர் திருத்துவது போன்று நீங்கள் கைதிகளை திருத்த வேண்டும். கைதிகளுக்கு நீங்கள் பெற்றோர் நிலையில் காணப்படுகிறீர்கள். கைதிகளின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களை சீர்திருத்தி நல்லமனிதனாக மாற்றி வெளியே அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜெயில் காவலர்களுக்கு 5 நாட்கள் நடக்கும் பயிற்சியில் கைதிகளின் மனநிலையை எவ்வாறு புரிந்து கொள்வது, ஜெயிலில் ஏற்படும் பதற்றமான சூழ்நிலைகளை எப்படி கையாளுவது, முதலுதவி அளிப்பது, உடற்பயிற்சி, யோகா உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் அந்த துறையில் நன்கு பயிற்சியும், அனுபவமும் உடையவர்களால் அளிக்கப்பட உள்ளது என்று ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story