ஊரக உள்ளாட்சி தேர்தல் வழிமுறைகளே இன்றும் பின்பற்றப்படும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளே இன்றும் பின்பற்றப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளே இன்றும் பின்பற்றப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம் ஆகிய 5 நகராட்சிகளில் பதிவான வாக்குகள் வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியிலும், அம்மூர், கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், திமிரி, விளாப்பாக்கம் ஆகிய 8 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் தென் கடப்பந்தாங்கலில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியிலும், அரக்கோணம் நகராட்சியில் பதிவான வாக்குகள் அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்படுகிறது.
இதனை முன்னிட்டு மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிவுரை வழங்கினர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
1,000 போலீசார் பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையத்திற்குள் வாகனங்கள் அனுமதி இல்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் அனைத்தும் தற்போதும் பின்பற்றப்படும். வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய மூலவர்கள் அடையாள அட்டையினை பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் சரிபார்த்த பின்னரே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். முதலில் தபால் ஓட்டுகள் காலை 8 மணிக்கு எண்ணப்படும். வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
எந்தெந்த சுற்றுகளில் எந்தெந்த வார்டு எண்ணப்படும் என்ற பட்டியல் தயாராக உள்ளது. அந்தப் பட்டியலின் படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு வார்டு வாக்குகளும் எண்ணி முடிக்கும் போது தபால் வாக்குகளையும் சேர்த்து முடிவு அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் அனைவரும் பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரக்கோணம்
மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாஸ்கர பாண்டியன் ஆகியோர் அரக்கோணம் நகராட்சி வாக்குகள் எண்ணப்படும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யனிடம் தெரிவித்தனர்.
அப்போது அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், தாசில்தார் பழனிராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் லதா, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story