குழித்துறையில் வக்கீல்கள் சாலை மறியல்


குழித்துறையில் வக்கீல்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Feb 2022 12:46 AM IST (Updated: 22 Feb 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் வக்கீல் சங்க தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து குழித்துறையில் வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

களியக்காவிளை:
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் வக்கீல் சங்க தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து குழித்துறையில் வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேர்தல் மோதல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குழித்துறை நகராட்சியில் 12-வது வார்டுக்கு மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது.
அப்போது அந்த வார்டில் எதிரெதிராக போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் லிசி ஜாய், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குழித்துறை கோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஜுலியட் மெர்லின் ரூத் உள்பட 4 பேர் காயமடைந்தனர். 
இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேட்பாளர் லிசி ஜாய், வக்கீல் சுரேஷ் உள்பட  மொத்தம் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சாலை மறியல்
இந்தநிலையில், வக்கீல் சங்க தலைவர் சுரேஷ் தாக்கப்பட்டதை கண்டித்தும், அவர் மீது மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கேட்டும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் குழித்துறையில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, அவர்கள் கோர்ட்டு முன்பு குழித்துறை- மேல்புறம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வக்கீல் சங்க தலைவரை தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story