இன்று வாக்கு எண்ணிக்கை: வெற்றி பெற்றவரின் சான்றிதழ் வழங்கிய பிறகு அடுத்த வார்டு ஓட்டுகள் எண்ணப்படும் கலெக்டர் கார்மேகம் தகவல்
இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு வார்டாக வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பிறகு அடுத்த வார்டின் ஓட்டுகள் எண்ணப்படும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
பேட்டி
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சேலம் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 4 பேர் போட்டியின்றி தேர்வு பெற்று உள்ளார்கள். மீதம் உள்ள 695 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நாளை (இன்று) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 16 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதை கண்காணிக்க 193 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சான்றிதழ்
வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு வார்டாக எண்ணி வெற்றி பெற்றவர்கள் முடிவு அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
அதன்பிறகு அவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். தொடர்ந்து அடுத்த வார்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள், முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அந்தந்த வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். கொரோனா கட்டுப்பாட்டையொட்டி வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கடும் நடவடிக்கை
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் கூறும் போது, ‘வாக்கு எண்ணும் பணிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் 1,450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’ என்றார். பேட்டியின் போது மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story