ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய மந்திரியின் மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தஞ்சையில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்:
மத்திய மந்திரியின் மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தஞ்சையில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார், வீரமோகன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, மக்கள் அதிகாரம் பொருளாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
ஜாமீனை ரத்து செய்யக்கோரிக்கை
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பேரியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்த வழக்கில் கைதான மத்திய மந்திரியின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவை கோர்ட்டு, ஜாமீனில் விடுதலை செய்துள்ளது. இந்த ஜாமீனை ரத்து செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும்.
மத்திய மந்திரி அஜய்மிஸ்ரா டேனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் வடிவேலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் முத்துக்குமார், மாதர் சங்க மாவட்ட தலைவர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story