சேலம் அம்மாபேட்டையில் வாக்கு எண்ணும் மையத்தில் போதையில் இருந்த போலீஸ் ஏட்டு அதிகாரிகள் விசாரணை


சேலம் அம்மாபேட்டையில் வாக்கு எண்ணும் மையத்தில்  போதையில் இருந்த போலீஸ் ஏட்டு அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 22 Feb 2022 1:31 AM IST (Updated: 22 Feb 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அம்மாபேட்டையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் ஏட்டு ஒருவர் போதையில் பணியில் இருந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்
வாக்கு எண்ணும் மையம்
சேலம் மாநகராட்சியில் கடந்த 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அங்கு சுழற்சி முறையில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று முன்தினம் போலீஸ் ஏட்டு ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் விசாரணை
இதனை கண்டுபிடித்த அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அந்த ஏட்டுவை கண்டித்தனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். 
அப்போது அங்கிருந்த டாக்டர்களிடம் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறி சிகிச்சைக்காக சேர்ந்தார். இதற்கிடையில் டாக்டர்களிடமும் அந்த போலீஸ் ஏட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஆஸ்பத்திரி போலீசார் அங்கு வருவதற்குள் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சேலம் மாநகர போலீசாரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story