பட்டுநூல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் வெண்பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தினமும் ரூ.5 கோடி வருவாய் இழப்பு
பட்டுநூல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் வெண்பட்டு ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால் தினமும் ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்,
வேலைநிறுத்தம் தொடங்கியது
சேலம் மாநகரில் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, பட்டைக்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் பட்டுநூல் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வெண்பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள். இந்த வேலை நிறுத்தம் வருகிற 25-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பட்டுவேட்டி உற்பத்தியை நிறுத்தி உள்ளனர். இதனால் தொழிலாளர்கள் இன்றி தறிக்கூடங்கள் வெறிச்சோடின.
ரூ.5 கோடி வருவாய் இழப்பு
இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து சேலம் சவுராஷ்டிரா வெண்பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-
கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி பட்டுநூல் விலை கிலோவுக்கு ரூ.2,700 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பட்டுநூல் 75 சதவீதம் வரை விலை உயர்ந்து ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதேபோல் பாவு பட்டு மற்றும் உற்பத்தி பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
விலை உயர்வு காரணமாக ஜவுளி ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தில் இயங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பட்டுநூல் விலை உயர்வை கண்டித்து இன்று (நேற்று) முதல் 5 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அதை சார்ந்த பிற தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். வேலைநிறுத்த போராட்டத்தால் தினமும் ரூ.5 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். பட்டுவேட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பட்டுநூல் உள்ளிட்டவைகளின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story