தேவூர் அருகே, கல்வடங்கம் காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றியதால் வெளியே தெரியும் சாமி சிலைகள்
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றியதால் ஆற்றுநீரில் மூழ்கி இருந்த சாமி சிலைகள் வெளியே தெரிகின்றன.
தேவூர்
கல்வடங்கம் காவிரி ஆறு
சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் காவிரியாற்றில் தண்ணீர் வற்றியதால் தண்ணீரில் மூழ்கி இருந்த வடிவம் பெறாத சாமி சிலைகள் ஆங்காங்கே வெளியே காட்சி அளித்து வருகிறது.
சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆறு புனித தீர்த்தமாக கருதப்படுவதால் சேலம், நாமக்கல் மாவட்டங்களின் பல்வேறு ஊர்களில் இருந்து கோவில் திருவிழாக்களுக்கு தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கமாகும்.
இந்த நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கற்சிலைகள் வடிவமைக்கும் சிற்பிகள் சரியான சாமி உருவத்திற்கு வராத சாமி சிலைகள் மற்றும் அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட கல்லினால் செய்யப்பட்ட சிலைகளை கல்வடங்கம் காவிரியாற்றில் செல்லும் தண்ணீரில் போட்டுவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வெளியே தெரியும் சாமி சிலைகள்
இந்த ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடும் காலங்களில் இந்த சிலைகள் ஆற்றுநீரில் முழ்கி விடும். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுவதால் ஆற்றில் தண்ணீரில் மூழ்கி இருந்த சாமி சிலைகள் தற்போது வெளியே தெரிகின்றன. இந்நிலையில் முக்கிய விசேஷ தினங்களில் தேவூர், எடப்பாடி, சங்ககிரி, ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கல்வடங்கம் காவிரியாற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், காவிரி ஆற்றில் ஆங்காங்கே காட்சியளிக்கும் ஓரளவு சரியான முறையில் வடிவமைப்பு பெற்ற விநாயகர் சிலைகளை எடுத்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் பூசி பூஜை பொருட்கள் வைத்து வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர்.
Related Tags :
Next Story