புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்
தொண்டாந்தோப்பு-ஆர்சுத்திப்பட்டுக்கு இடையே புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளுடன் வந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கிராமமக்கள் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்:
தொண்டாந்தோப்பு-ஆர்சுத்திப்பட்டுக்கு இடையே புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளுடன் வந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கிராமமக்கள் மனு அளித்தனர்.
மாணவர்களுடன் வந்த கிராமமக்கள்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா தொண்டாந்தோப்பு கிராமத்தை சேர்ந்த 15 பேர், 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் இவர்களில் 5 பேர் சில மாணவர்களை அழைத்து கொண்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்கள் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்சுத்திப்பட்டு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். கிராமமக்கள் (நாங்கள்) வேலை விஷயமாகவும், கடைகளுக்கும் சென்று வருகிறோம்.
சிரமம்
தொண்டாந்தோப்பில் இருந்து ஆர்சுத்திப்பட்டுக்கு செல்லும் வழியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தின் வழியாக தான் பல ஆண்டுகளாக சென்று வருகிறோம். இந்த இடத்தை சுத்தம் செய்வதற்காக நடைபாதையை மறித்து கம்பிவேலி போட உள்ளனர். இதனால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு சிரமம் ஏற்படக்கூடிய நிலை உள்ளது.
தொண்டாந்தோப்பில் இருந்து ஆர்சுத்திப்பட்டுக்கு இடையே 1 கிலோமீட்டர் தூரம் உள்ளது. தற்போது நடைபாதையை மறித்து வேலிபோட்டுவிட்டால் 3 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகும் சூழல் உள்ளது. எனவே எந்த தடையும் இன்றி பள்ளிக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தொண்டாந்தோப்பில் இருந்து ஆர்சுத்திப்பட்டுக்கு சாலைவசதி செய்து தர வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு நினைத்தால் முடியும்
இது குறித்து கிராமமக்கள் சிலர் கூறும்போது, ஏற்கனவே இதே கோரிக்கையை நிறைவேற்றக்கோரி மனு அளித்துள்ளோம். ஆனால் மனுவை நிராகரித்துவிட்டனர். அதிகாரிகளிடம் காரணம் கேட்டால், உங்களது கோரிக்கைபடி அந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் அது கோவிலுக்கு சொந்தமான இடம் என்பது தெரியவந்ததால் கோரிக்கையை ஏற்க இயலவில்லை என தெரிவித்துவிட்டனர். அரசு நினைத்தால் அந்த பகுதியில் சாலை அமைத்து கொடுக்க முடியும். எனவே மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தின் நலன் கருதி சாலை அமைத்து தர வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story