குற்றாலத்தில் வாடகை பாக்கிக்காக கடையை `சீல்' வைக்க வந்த அதிகாரி வியாபாரிகள் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு
வாடகை பாக்கிக்காக கடையை சீல் வைக்க வந்த அதிகாரி வியாபாரிகள் வாக்குவாதம்
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளை குத்தகை எடுத்தவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு வாடகை கொடுத்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலத்தில் சீசன் சரி இல்லாத சூழ்நிலை இருந்தது. இதனால் வியாபாரம் பாதிப்படைந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக வியாபாரிகள் மேலும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு ஒரு நாள் கோவில் நிர்வாகத்தில் இருந்து வாடகை பாக்கி வைத்திருந்த 3 கடைகளை கோவில் நிர்வாகம் `சீல்' வைத்தது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அரசியல் கட்சியினர் நிர்வாகத்திடம் பேசி தேர்தல் முடிந்த பிறகு இதற்கான நடவடிக்கை எடுக்கலாம் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது நிர்வாகம் இந்த நடவடிக்கையை நிறுத்தி வைத்தது. நேற்று கோவில் உதவி ஆணையர் கண்ணதாசன் மற்றும் பணியாளர்கள் குற்றாலம் பஜாரில் ஒரு கடைக்கு `சீல்' வைக்க சென்றனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் குறைவான போலீசாரே குற்றாலம் போலீஸ் நிலையத்தில் இருந்தனர். இதனால் அதிகாரி கண்ணதாசன் மற்றும் பணியாளர்கள் கடையை `சீல'் வைக்க சென்றபோது வியாபாரிகள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது உதவி ஆணையரை கடையை அடைக்க விடாமல் தடுத்தனர். அந்த நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் குற்றாலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story