வணிகர் நலச்சங்க பிரமுகர் வீட்டில் 11¾ பவுன் நகைகள் திருட்டு
வணிகர் நலச்சங்க பிரமுகர் வீட்டில் 11¾ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
மருத்துவ சிகிச்சை
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள மேற்கு அபிராமபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 59). இவருக்கு சுமதி என்ற மனைவியும், பரணிதரன், கார்த்தி, சபரி ஆகிய 3 மகன்களும் உள்ளனர். ரவிச்சந்திரன் தனியார் எண்ணெய் நிறுவனத்தின் திருச்சி டீலராக உள்ளார். மேலும் அவர் பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச்சங்கத்தின் பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
பரணிதரன் சென்னையிலும், கார்த்தி லண்டனிலும், சபரி பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 16-ந்தேதி மாலை தனது மனைவியுடன் சென்னையில் உள்ள பரணிதரன் வீட்டிற்கு சென்று, அங்கிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
நகைகள் திருட்டு
அங்கிருந்து ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெரம்பலூருக்கு திரும்பினார். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவில் பூட்டு இல்லாமல் திறந்து கிடந்தது. அதைக்கண்டு திடுக்கிட்ட அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் வைத்திருந்த வைர தோடு, 11¾ பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
வலைவீச்சு
மேலும் திருட்டு நடந்த வீட்டிற்கு போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story