ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டு மறுதேர்தலில் 58 சதவீத ஓட்டுகள் பதிவு
ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டு மறுதேர்தலில் 58 சதவீத ஓட்டுகள் பதிவானது.
ஜெயங்கொண்டம்:
சின்னத்தில் குளறுபடி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 108 பேர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதில் 21,435 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இது 76.44 சதவீதம் ஆகும்.
இந்தநிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் சுயேச்சையாக போட்டியிட்ட விஜயலெட்சுமிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மறைதிருக்கி (ஸ்பேனர்) சின்னம் தபால் வாக்குச்சீட்டுகளில் திருகாணி சின்னமாக பதிவிடப்பட்டு உள்ளதாகவும், வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட மறைதிருக்கி சின்னம் சரியாக பதிவிடப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
மறுவாக்குப்பதிவு
மேலும் இது குறித்த புகார் தேர்தல் ஆணையத்திற்கு சென்றதால் இவ்வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16-வது வார்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 2 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது.
நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வார்டை சேர்ந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர். அவர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
58 சதவீத ஓட்டுகள் பதிவு
இந்த வார்டில் மொத்தமுள்ள 1,640 வாக்காளர்களில், நேற்று நடந்த மறுவாக்குப்பதிவின்போது, பெண்கள் 489 பேரும், ஆண்கள் 458 பேரும் என மொத்தம் 947 பேர் ஓட்டுப்போட்டனர். இது 58 சதவீத வாக்குப்பதிவாகும். கடந்த 19-ந் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது 1,034 பேர் வாக்களித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி மறுவாக்குப்பதிவில் 87 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான ஜெயங்கொண்டத்தில் உள்ள பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. அந்த வாக்குகள், மற்ற வார்டுகளில் பதிவான வாக்குகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட உள்ளது.
Related Tags :
Next Story