நகராட்சி-பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி


நகராட்சி-பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி
x
தினத்தந்தி 22 Feb 2022 4:19 AM IST (Updated: 22 Feb 2022 4:19 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி-பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடக்கிறது.

பெரம்பலூர்:

இன்று வாக்கு எண்ணிக்கை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 50 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல் பேரூராட்சிகளில் குரும்பலூர், அரும்பாவூரில் தலா 15 வார்டுகளுக்கு, தலா 15 வாக்குச்சாவடிகளிலும், பூலாம்பாடியில் 13 வார்டுகளுக்கு, 13 வாக்குச்சாவடிகளிலும், லெப்பைக்குடிகாட்டில் 15 வார்டுகளுக்கு, 17 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. இதன்படி மாவட்டத்தில் மொத்தம் 110 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் க.எறையூர் அருகே உள்ள மகாத்மா பப்ளிக் பள்ளியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன.
இதற்காக வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அடையாள அட்டை, முககவசம் அணிந்து வர வேண்டும். வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் காலை 7 மணிக்குள் வந்து விட வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் அனைவரையும் போலீசார் சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதிப்பார்கள் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மையத்திற்கு வருபவர்களை சோதனையிட மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் தபால் வாக்குகள்...
வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் ஓட்டுகள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் எண்ணப்பட்டு, அதனைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த பணிகளில் நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட நிலைகளிலான அலுவலர்கள் என மொத்தம் 105 பேர் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் தரை தளத்தில் பேரூராட்சிகளுக்கு தனித்தனி அறைகளும், முதல் தளத்தில் நகராட்சிக்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறைகளில் வாக்குகள் எண்ணப்படவுள்ளது.
தபால் வாக்குகளை எண்ணுவதற்கு நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலா ஒரு மேஜை அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண பெரம்பலூர் நகராட்சிக்கு 7 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. 8 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது. குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளுக்கு தலா 2 மேஜைகள் அமைக்கப்பட்டு, குரும்பலூர், அரும்பாவூருக்கு தலா 8 சுற்றுகளாகவும், பூலாம்பாடிக்கு 7 சுற்றுகளாகவும், லெப்பைக்குடிகாட்டிற்கு 9 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். மேலும் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ கேமரா மூலமும் பதிவு செய்யப்படும்.
பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விவரம் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிப்பு பலகையில் எழுதப்படும். மேலும் ஒவ்வொரு சுற்றுக்கான விவரம் அந்தந்த வேட்பாளர்கள், அவர்களுக்கான முகவர்களுக்கு வழங்கப்படும். ஒலிபெருக்கியிலும் தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறும் வேட்பாளர் சான்றிதழ் வாங்க, 2 பேரை அழைத்து செல்லலாம்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும், அந்த பள்ளி நுழைவு வாயில் முதல் வாக்கு எண்ணும் மையம் வரையிலும் கம்புகளால் தடுப்புகள், இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளி முன்பும், வாக்கு எண்ணும் மையம் முன்பும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணி
வாக்கு எண்ணிக்கையையொட்டி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் 420 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் வெடிகுண்டு பரிசோதனை குழுவினர் பணியில் ஈடுபட உள்ளனர். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 230 போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் ஊர்க்காவல் படையினரும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
அலுவலர்களுக்கு பயிற்சி
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியா பேசுகையில், வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க குறைவான வித்தியாசங்களே உள்ளதால் இப்பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். நுண்பார்வையாளர்கள் மற்றும் வட்டார பார்வையாளர்கள் ஆகியோரிடம் தங்களுக்கு ஏதும் சந்தேகம் இருப்பின் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தனியார் நிறுவன பொறியாளர்களும் அங்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி பணிகளை முடிக்க வேண்டும். அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக வாக்கு எண்ணிக்கையை நடத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Next Story