தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை
தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை
திருப்பூர்:
திருப்பூர் மார்க்கெட்டுக்குள் நள்ளிரவில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு மர்ம ஆசாமிகள் தப்பி விட்டனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கத்திக்குத்து காயம்
திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக தினசரி காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பின்புறம் நேற்று காலை கத்திக்குத்து காயத்துடன் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையானவரின் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு குடல் வெளியேறி இருந்தது. உடலுக்கு அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. இதனால் நள்ளிரவில் குடிபோதை தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பெயிண்டர்
முதல்கட்ட விசாரணையில் கொலையானவர் ஸ்ரீதர் (வயது 40) என்பதும், பெயிண்டராக வேலை செய்து வந்ததும், கிடைத்த வேலையை செய்து ரோட்டோரம் தங்கியதும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீதரின் சொந்த ஊர் தஞ்சாவூர் என தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர்களின் உறவினர்களை தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
உறவினர்கள் திருப்பூர் வந்த பிறகே கொலையானவர் ஸ்ரீதர் என்பது உறுதிப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தார்கள். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை
மார்க்கெட் வளாகத்தில் நண்பர்களுடன் மது அருந்தியபோது இந்த கொலை சம்பவம் நடந்ததா, அல்லது ஸ்ரீதர் வைத்திருந்த பணத்துக்காக அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மார்க்கெட் வளாகம், பல்லடம் ரோடு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
Related Tags :
Next Story