திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட பெண்கள் முற்றுகை
திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட பெண்கள் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் ஆர்பாட்டம் நடத்தி முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் 100 நாள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று வழக்கப்போல் வேலைக்கு சென்று உள்ளனர். அப்போது பணிதள பொறுப்பாளர் உங்களுக்கு இந்த பகுதியில் வேலை இல்லை, வேறு இடத்தில் தான் வேலை என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் தொழிலாளர்கள் திருத்தணி ஒன்றிய அலுவலகத்தின் நுழைவு வாயிலில் ஆர்பாட்டம் நடத்தி முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு மற்றும் பணிமேற்பார்வையாளர் பெண்களிடம் சமரசம் செய்தனர். அப்போது போராட்டம் நடத்திய பெண்கள் ஊராட்சி நிர்வாகம் மீது புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் போராட்டம் நடத்திய பெண்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story