தூத்துக்குடியில் 5 மணி நேரம் நடந்த பரபரப்பான வாக்கு எண்ணிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மணி நேரமாக பரபரப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மணி நேரமாக பரபரப்பான வாக்கு எண்ணிக்கை நடந்தது. பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால், வெற்றியாளர்களை ஆதரவாளர்கள் உற்சாக கைதட்டி மாலை அணிவித்து வரவேற்று சென்றனர்.
வாக்கு எண்ணிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மாவட்டம் முழுவதும் 9 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பதிவான வாக்குகள் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டன.
இதனால் நேற்று காலை முதல் வாக்கு எ்ணணிக்கை மையம் முன்பு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வந்து குவிந்தனர். தொடர்ந்து வேட்பாளர்கள் உரிய சோதனைக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் முகவர்கள் பென்சில் மற்றும் நோட்டு மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன் உள்ளிட்டவற்றை வெளியில் கொடுத்துவிட்டு சென்றனர்.
கூச்சல்
காலை 8 மணிக்கு தபால் ஓட்டுப் பெட்டி வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ தலைமையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து வார்டு வாரியாக வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டன. அதன் பிறகு தபால் ஓட்டுக்கள் பிரிக்கப்பட்டு தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை 2 அறைகளில் தலா 15 மேஜைகள் அமைக்கப்பட்டு எண்ணப்பட்டன. ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமிராவும் பொருத்தப்பட்டு இருந்தன.
நுண் பார்வையாளரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த முகவர்கள் தபால் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக எண்ணக்கூடாது என்று கூறி அனைத்து முகவர்களும் கூச்சலிட்டனர்.
பரபரப்பு
இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ, தேர்தல் ஆணையம், ஒவ்வொரு வார்டுக்கும் கடைசி வாக்குப்பதிவு எந்திரம் எண்ணி முடிக்கும் முன்பு தபால் வாக்குகள் விவரம் அறிவிக்க வேண்டும் என்று அறிவித்து உள்ளது. அதன்படி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார். இதனை தொடர்ந்து முகவர்கள் அமைதியானார்கள். பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பரபரப்பாக காணப்பட்டது. ஒவ்வொரு வார்டுக்கும் புதிய வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளே வந்து கொண்டே இருந்தனர். இதனால் அவர்கள் பரபரப்பாக காணப்பட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய பரபரப்பு மதியம் 1 மணி வரை 5 மணி நேரமாக நீடித்தது. மாவட்ட தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் வாக்கு எண்ணிக்கை பணியை ஆய்வு செய்தார்.
பட்டாசுகளை வெடித்து வெற்றியை கொண்டாட தடை விதிக்கப்பட்டதால், வெற்றி பெற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறிய வெற்றி வேட்பாளர்களை வெளியே காத்திருந்த ஆதரவாளர்கள் உற்சாகமாக கைதட்டி மாலை அணிவித்து வரவேற்று சென்றனர்.
Related Tags :
Next Story