தூத்துக்குடி அருகே 20 டன் உப்பு பறிமுதல்
தூத்துக்குடி அருகே குளத்தூரில் உரிய லேபிள் விவரம் இன்றி பொட்டலமிடப்பட்ட 20 டன் உப்பு பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அதிகாரி மாரியப்பன் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே குளத்தூரில் உரிய லேபிள் விவரம் இன்றி பொட்டலமிடப்பட்ட 20 டன் உப்பு பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அதிகாரி மாரியப்பன் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன், விளாத்திக்குளம் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் குளத்தூர் பகுதியில் உள்ள உப்பு பொட்டலமிடும் நிறுவனத்தை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 50 கிலோ மூட்டைகளாக 20 டன் உப்பு பொட்டலங்கள் இருந்தன.
அந்த உப்பு பொட்டலத்தை ஆய்வு செய்த போது, அதில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்துக்கு உட்பட்டு லேபிள் விவரங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது.
எனவே, அங்கிருந்த 20 டன் உப்பை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த உப்பில் இருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி, அதன் அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
நடவடிக்கை
மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றியும், உரிய லேபிள் விவரங்கள் இன்றியும் உணவுப் பொருள் உற்பத்தி செய்வது, பொட்டலமிடுவது, இருப்பு வைப்பது, வாகனங்களில் போக்குவரத்து செய்வது, சில்லறை விற்பனை செய்வது ஆகியவை தண்டனைக்கு உரியதாகும்.
எனவே, உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள் அனைவரும் உடனடியாக www.foscos.fssai.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் எடுக்கவும், உணவுப்பொருட்களை உரிய லேபிள் விவரங்களுடன் பொட்டலமிட வேண்டும். தவறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story