பொள்ளாச்சியில் விறு விறுப்பாக வாக்கு எண்ணிக்கை


பொள்ளாச்சியில் விறு விறுப்பாக வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 22 Feb 2022 10:50 PM IST (Updated: 22 Feb 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறு விறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறு விறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது.

நகர்ப்புற தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு 151 பேர் போட்டியிட்டனர். மேலும் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 72 பேரும், ஜமீன்ஊத்துக்குளியில் 49 பேரும், ஆனைமலையில் 59 பேரும், கோட்டூரில் 104 பேரும், ஒடையகுளத்தில் 45, வேட்டைக்காரன்புதூரில் 57 பேரும் போட்டியிட்டனர்.
இதையடுத்து வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. 

பொள்ளாச்சி நகராட்சிக்கு என்.ஜி.எம். கல்லூரியும், சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர், கோட்டூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், ஜமீன்ஊத்துக்குளி, ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு ஆனைமலை வி.ஆர்.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குகள் எண்ணும் பணி விறு விறுப்பாக நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் வேட்பாளர்கள், முகவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மேலும் போலீசார் தடுப்பு அமைத்து, அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களை மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதித்தனர். 

தபால் வாக்குகள்

இதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் தாணுமூர்த்தி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையின் சீலை உடைத்து, கதவை திறந்தார். பின்னர் 8.10 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் இருந்த பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வார்டு வாரியாக தபால் வாக்குகளை பிரிக்கும் பணி நடைபெற்றது. 

அப்போது 5 தபால் வாக்குகளில் வார்டு குறித்த விவரம் இல்லை. இதன் காரணமாக அந்த தபால் வாக்குகளை தனியாக வைத்திருந்தனர். இதை பார்த்த வேட்பாளர்கள், முகவர்கள் அந்த தபால் வாக்குகளையும் சேர்த்து எண்ண வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனே தேர்தல் நடத்தும் அலுவலர் தாணுமூர்த்தி, எந்த வார்டு என்பது குறிப்பிடவில்லை. எனவே கடைசியாக வேட்பாளர்கள் முன்னிலையில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எந்த வார்டு என்பது தெரியப்படுத்தப்படும் என்றார். மொத்தம் 163 தபால் வாக்குகள் இருந்தன. இதில் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்த 2 தபால் வாக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 

வெற்றி சான்றிதழ் 

இதையடுத்து 8.50 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. ஒரு சுற்றுக்கு 7 வார்டு வீதம் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் முதல் வார்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதன் காரணமாக அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர். ஆனால் அதன்பிறகு எண்ணப்பட்ட பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 30 வார்டுகளில் தி.மு.க.வும், ஒரு வார்டில் ம.தி.மு.க.வும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தாணுமூர்த்தி சான்றிதழை வழங்கினார். தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை தொண்டர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தி.மு.க. கைப்பற்றியது

இதையொட்டி பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையில் சுமார் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்கபட்டது. இதேபோன்று பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்கள். 

பொள்ளாச்சி நகராட்சி, வால்பாறை நகராட்சி, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, சமத்தூர், கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், கிணத்துக்கடவு, நெகமம் ஆகிய பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.


Next Story