ஈரோடு மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது


ஈரோடு மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 22 Feb 2022 11:28 PM IST (Updated: 22 Feb 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகராட்சியை தி.மு.க.வினா் கைப்பற்றினாா்கள்.

ஈரோடு மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
தரம் உயர்த்தப்பட்டது
ஈரோடு மாநகராட்சிக்கு என்று தனி சிறப்பு உண்டு. 1919- ம் ஆண்டில் பெரியார் தலைவராக இருந்த பெருமை கொண்டது. ஈரோட்டை பெரிய நகரமாக்க வேண்டும் என்று கனவு கண்டு தீர்மானம் கொண்டு வந்தவரும் அவர்தான். அவருக்கு பின்னால் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் இந்த ஈரோடு மண்ணில் அரசியல் பாடம் படித்தார்கள். பெரியாரை தங்கள் அரசியல் ஆசானாக கருதி ஈரோட்டை குருகுலம் என்று சொல்வது திராவிட இயக்கங்களின் வழக்கம்.
இந்த குருகுலத்தை மாநகராட்சி என்ற அந்தஸ்துக்கு உயர்த்திய பெருமை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சேரும். கடந்த 2008-ம் ஆண்டு ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2009-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 
பலமுனை போட்டி
2011-ம் ஆண்டு சுமார் 110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 60 வார்டுகளுடன் ஈரோடு மாநகராட்சி முதல் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் ஈரோடு மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஈரோடு மாநகராட்சியின் முதல் தேர்ந்து எடுக்கப்பட்ட மேயராக மல்லிகா பரமசிவம் பதவி ஏற்றார்.
2016-ம் ஆண்டு தேர்தல் நடைபெறவில்லை. தற்போது நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர், தே.மு.தி.க., பா.ம.க., ம.நீ.ம., அ.ம.மு.க. என்று பல முனை போட்டி நடந்தது.
43 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானபோது தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மட்டுமே நேரடி போட்டி இருந்தது தெரியவந்தது. மக்கள் மனநிலை ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருந்தது. 9 மாதங்களில் தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தும், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்கள் மக்களை சென்று அடைந்ததன் பயனாக பெருவாரியான இடங்களை தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றி சாதனை படைத்து உள்ளன.
நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. 43 வார்டுகளை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 3, ம.தி.மு.க. 1 மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியது. 
தனிப்பெரும்பான்மை
தேர்தலுக்கு முன்பே 51-ம் வார்டில் தி.மு.க. போட்டியின்றி தேர்வு பெற்று வெற்றிக்கணக்கை தொடங்கியது. தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஈரோடு மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
அ.தி.மு.க. 6 வார்டுகளையும், சுயேச்சைகள் 6 வார்டுகளையும் கைப்பற்றி உள்ளன. 
ஈரோடு மாநகராட்சி மொத்த வார்டுகள்:- 60
தி.மு.க- 43
அ.தி.மு.க- 6
காங்கிரஸ்- 3
ம.தி.மு.க.- 1
கொ.ம.தே.க. (உதயசூரியன் சின்னத்தில்)-1
சுயேச்சைகள்- 6
------

Next Story