திண்டுக்கல் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
திண்டுக்கல் மாநகராட்சியில் தி.மு.க. வெற்றி பெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இந்த 48 வார்டுகளின் கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், பா. ஜனதா, தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 338 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதில் தள்ளுபடி மற்றும் வாபஸ் போக இறுதி வேட்பாளர் பட்டியலில் 275 வேட்பாளர்கள் இடம்பெற்றனர். திண்டுக்கல் மாநகராட்சியை பொறுத்தவரை 1 லட்சத்து 83 ஆயிரத்து 534 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 183 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து தேர்தலில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 484 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
தி.மு.க. கைப்பற்றியது
இதை தொடர்ந்து நேற்று வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 30 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். கடந்த 2011-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 14 வார்டுகளில் வென்ற தி.மு.க., தற்போது 30 வார்டுகளில் வெற்றிபெற்று திண்டுக்கல் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை படைத்து இருக்கிறது.
திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தலில் தி.மு.க. வெற்றி முத்திரையை பதித்து இருக்கிறது. அதேநேரம் அ.தி.மு.க.வை பொறுத்தவரை 5 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த 2011-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 29 வார்டுகளில் அ.தி.மு.க. வென்றது குறிப்பிடத்தக்கது.
பெண் மேயர் யார்?
திண்டுக்கல் மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எனவே திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் பதவியை தி.மு.க. தனது வசமாக்கி இருக்கிறது. இந்த முதல் பெண் மேயர் பதவியை பெறப்போகும் தி.மு.க. கவுன்சிலர் யார்? என்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாநகராட்சியில் வெற்றி பெற்ற 3 பெண் கவுன்சிலர்களின் பெயர்கள், மேயர் பதவிக்கு அடிபடுகின்றன. அதேபோல் துணை மேயர் பதவிக்கு கவுன்சிலரும் தி.மு.க. நிர்வாகியான ஒருவர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியின் 48 வார்டுகளில் வெற்றிபெற்ற கட்சிகளின் இறுதி நிலவரம் வருமாறு:-
தி.மு.க.-30, அ.தி.மு.க.-5
மா.கம்யூனிஸ்டு- 3. காங்கிரஸ்- 2,
பா.ஜனதா-1 இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்-1,
விடுதலை சிறுத்தைகள் கட்சி-1
சுயேச்சைகள்- 5
Related Tags :
Next Story