கோவையில் விறுவிறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
கோவை
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.அரசு தொழில்நுட்பக் கல்லூரி முன்பு திருவிழாக்கூட்டம்போல் திரண்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. கோவை மாநகராட்சி-1, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய 7 நகராட்சிகள், மோப்பிரிபாளையம், சிறுமுகை, அன்னூர், ஆனைமலை, ஜமீன் ஊத்துக்குளி, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், பெரியநாயக்கன்பாளையம், நெ.4 வீரபாண்டி, நரசிம்மநாயக்கன்பாளையம், கோட்டூர், சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர், ஒத்தக்கால்மண்டபம், செட்டிப்பாளையம், வெள்ளலூர், கிணத்துக்கடவு, பெரிய நெகமம், எட்டிமடை, திருமலையம்பாளையம், சர்க்கார்சாமக்குளம், இடிகரை, தாளியூர், தொண்டாமுத்தூர், வேடப்பட்டி, பேரூர், பூலுவப்பட்டி, ஆலாந்துறை, தென்கரை, சூலூர், கண்ணம்பாளையம், இருகூர், பள்ளப்பாளையம் ஆகிய 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.
வாக்கு எண்ணும் பணி
மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 17 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நேற்று காலை நடைபெற்றது. இதற்காக 496 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், 150 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜி.சி.டி) காலை 8 மணியளவில் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதன்பிறகு ஸ்ட்ராங் ரூமில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வரப்பட்டு வாக்கு எண்ணும் மேஜைகளில் வைக்கப்பட்டது. பின்னர் அங்கு இருந்த வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடம் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் அதற்குள் இருந்த ஆவணங்கள் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
140 மேஜைகள்
இதற்காக அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 140 மேஜைகள் போடப்பட்டு அதன் மூலம் அதிகபட்சமாக 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வாக்கு எண்ணும் பணியை தேர்தல் சிறப்பு பார்வையாளர் நாகராஜன், பார்வையாளர் கோவிந்த ராவ், கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அரசு தொழில்நுட்ப கல்லூரிக்குள் ஓட்டு எண்ணும் இடத்திற்கு ஒவ்வொரு சுற்றாக மட்டுமே முகவர்கள், வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் முகவர்கள் வேட்பாளர்கள் கல்லூரி முன்பு திரளாக காத்துக் கொண்டிருந்தனர்.
போலீஸ் எச்சரிக்கை
முகவர்களின் வாகனங்கள் வனக்கல்லூரி வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் வனக்கல்லூரி வாகன நிறுத்துமிடம் ஆயிரக்கணக்கான வாகனங்களால் நிறைந்து வழிந்தது. வாகன நிறுத்துமிடம் நிறைந்ததால் முகவர்கள் தங்களது வாகனங்களை கல்லூரிக்குள் ஆங்காங்கே நிறுத்தி சென்றனர்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காத்திருந்தனர். அவர்களை தடுப்புகள் அமைக்கப்பட்டு முழு பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். முகவர்கள் பேனா மற்றும் பேப்பர் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.
அதை தவிர மணிபர்ஸ், செல்போன், பேப்பர் வைத்து எழுதப் பயன்படுத்தும் அட்டை ஆகியவற்றை அனுமதிக்கப் படவில்லை. முகவர்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு பேனா, பேப்பர் தவிர மற்ற பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொண்ட சில முகவர்கள் தங்களது செல்போனை தாங்கள் அணிந்து இருந்த ஷூவிற்குள் மறைத்து கொண்டு சென்றதாக தெரிகிறது.
இதனால் போலீசார் முகவர்களது ஷூவை கழட்டி பரிசோதனை செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர், சாப்பிடுவதற்காக தனது ஷூவுக்குள் ஏராளமான மிட்டாய்களை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இதற்கிடையில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கல்லூரி முன்பு கடல்போல் திரண்டு இருந்தனர். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து தேர்தல் முடிவுகளை அறிந்ததும், தங்களுக்கு பிடித்த வேட்பாளர்கள் வெற்றி பெற்று விட்டதை மேள, தாளங்களுடன் ஆட்டம் போட்டு கொண்டாடினர். இதனால் கல்லூரி வளாகமும், வாசல் முன்பும் திருவிழா கூட்டம்போல் காணப்பட்டது.
Related Tags :
Next Story