முதல்முறையாக நடந்த தேர்தலில் ஓசூர் மாநகராட்சியில் மகுடம் சூடிய தி.மு.க.
ஓசூர் மாநகராட்சிக்கு முதல்முறையாக நடந்த தேர்தலில் தி.மு.க. மகுடம் சூடி உள்ளது.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சிக்கு முதல்முறையாக நடந்த தேர்தலில் தி.மு.க. மகுடம் சூடி உள்ளது.
ஓசூர் மாநகராட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நகராட்சியாக இருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு 45 வார்டுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை நகராட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வந்த மக்கள், முதன் முறையாக கடந்த 19-ந் தேதி நடந்த தேர்தலில், மாநகராட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், 21 வார்டுகளை தி.மு.க கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க. -அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 45 வார்டுகளில் தி.மு.க-21 வார்டுகளிலும், அ.தி.மு.க- 16 வார்டுகளிலும், பா.ஜ.க., பா.ம.க. காங்கிரஸ் தலா ஒரு வார்டுகளிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தி.மு.க. மேயர்
தனிப்பெரும்பான்மைக்கு 23 இடங்கள் தேவைப்படும் நிலையில் தி.மு.க. 21 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தாலும் கூடுதலாக 2 இடங்கள் தேவை என்ற நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினர் ஆதரவும், மற்றும் தி.மு.க.வில் சீட் கேட்டு மறுக்கப்பட்டு சுயேச்சையாக வெற்றிபெற்றுள்ள 3 பேரும், காங்கிரசில் சீட் மறுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ள ஒரு வேட்பாளர் ஆகியோர் ஆதரவுடனும் தி.மு.க. மேயர் பதவியை கைப்பற்றுகிறது.
மாநகராட்சியாக தரம் உயர்ந்த பிறகு முதலாவதாக மகுடம் சூடியுள்ள தி.மு.க.வின், முதல் மேயர் என்ற கிரீடத்தை அலங்கரிக்க போகிறவர் யார்? என்ற பலத்த ஆவலும், எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாவட்டம்
அதே நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, நாகோஜனஅள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய 5 பேரூராட்சிகளை தி.மு.க. தன்வசமாக்கி உள்ளது. கெலமங்கலம் பேரூராட்சியில் மட்டும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நிலை நீடிக்கிறது. சுயேச்சையாக வெற்றி பெற்ற 6 பேரின் கையில் தான் தலைவர் பதவி யாருக்கு என்ற முடிவு உள்ளது.
அதே நேரத்தில் கிருஷ்ணகிரி நகராட்சியிலும் தி.மு.க. மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 22 வார்டுகளில் அமோக வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நகரசபை தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது.
Related Tags :
Next Story