வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக வேட்பாளர்கள் தர்ணா போராட்டம்


வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக வேட்பாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2022 12:35 AM IST (Updated: 23 Feb 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

தோல்வி அடைந்ததாக அறிவிக்க முயற்சிப்பதாக கூறி விழுப்புரம் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சி தேர்தலில் வார்டு எண் 23-ல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோதண்டராமன் 953 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்தை விட 4 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் நகராட்சி 26-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயப்பிரியா சக்திவேல் 426 வாக்குகள் பெற்று 37 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சந்திராவை தோற்கடித்தார்.
இதையடுத்து வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர்கள் கோதண்டராமன், ஜெயப்பிரியா சக்திவேல் ஆகிய இருவரும் தாங்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியான சுரேந்திரஷாவிடம் வாங்க வெளியே தயாராக காத்திருந்தனர். ஆனால் வெகு நேரமாகியும் அவர்கள் இருவரையும் வெற்றி பெற்றதற்கான அறிவிப்பையும் வெளியிடவில்லை, வெற்றி சான்று பெற வருமாறும் அழைக்கவில்லை.

மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மனு

இதற்கிடையே 23-வது வார்டு மற்றும் 26-வது வார்டுகளில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தி.மு.க.வினர் சிலர் நகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சென்று முறையிட்டு அதுசம்பந்தமான மனுவையும் கொடுத்தனர். 
இதனால் அந்த 2 வார்டுகளில் மட்டும் யார் வெற்றி பெற்றனர் என்ற அறிவிப்பை வெளியிடாமல் மற்ற வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதுபோல் மற்ற வார்டுகளில் வாக்கு எண்ணிக்கையும் தடையின்றி நடைபெற்று கொண்டிருந்தது.
இந்த சூழலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கோதண்டராமன், ஜெயப்பிரியா சக்திவேல் ஆகியோர் வெகுநேரம் காத்திருந்தும் தங்களை வெற்றி பெற்றதாக அறிவிக்காததால் அவர்கள் இருவரும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சென்று முறையிட்டனர். அதற்கு உங்கள் 2 வார்டுகளிலும் மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு தி.மு.க.வினர் மனு கொடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

அதிகாரிகளிடம் வாக்குவாதம்

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் இருவரும் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளும் தங்கள் இருவரையும் ஆளும்கட்சியின் அதிகார பலத்தால் தோல்வி அடைந்ததாக  அறிவித்துவிட்டு அவ்வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க பார்க்கிறார்கள் என்று கூறி தேர்தல் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை கிடையாது, எப்படி நடத்துவீர்கள் என்றும் தேர்தல் முடிவை நியாயமாக அறிவிக்க வேண்டும் என்றும், மக்களின் வாக்குகளாலும், கடின உழைப்பினாலும் வெற்றி பெற்றுள்ளோம், எனவே எங்கள் இருவருக்கும் வெற்றி சான்றிதழை வழங்குமாறு கேட்டு அதிகாரிகளிடம் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். 
இருப்பினும் அதிகாரிகள், அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவில்லை.

தர்ணா போராட்டம்

இதன் காரணமாக மேலும் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் கோதண்டராமன், ஜெயப்பிரியா சக்திவேல் ஆகிய இருவரும் தங்கள் இருவருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி விட்டு மற்ற வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழை வழங்குங்கள் என்று கூறியதோடு மற்ற வேட்பாளர்களை வெற்றி சான்றிதழை பெற விடாமல் தடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் போட்டியிட்ட 2 வார்டுகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் முறையாக வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது, எங்கள் வார்டுகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்தால் எங்கள் கட்சியின் சார்பில் மற்ற வார்டுகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களையும் நாங்கள் இங்கு வரச்சொல்வோம், அவர்கள் வார்டுகளிலும் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துங்கள் என்று கூறியதோடு, எங்கள் இருவரையும் உடனடியாக வெற்றி பெற்றதாக அறிவித்து அதற்கான சான்றிதழை வழங்காவிட்டால் இங்கேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நீடித்தது. இதன் காரணமாக மற்ற வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கும் பணியும் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இருவரிடமும் போலீஸ் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 
இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். 
இதற்கிடையில் இவர்களது ஆதரவாளர்களும் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே திரண்டு தி.மு.க.வினர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் லட்சுமி, நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். 
பின்னர் 23, 26 ஆகிய வார்டுகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களது முன்னிலையில் இரு கட்சிகளின் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் குறித்து சரிபார்க்கப்பட்டது.

மறுவாக்கு எண்ணிக்கை

இதில் 23-வது வார்டில் தி.மு.க.- அ.தி.மு.க. கட்சி வேட்பாளர்களிடையே 4 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் அவ்வார்டில் மட்டும் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது. 
இதன் முடிவில் ஏற்கனவே அறிவித்தவாறு அ.தி.மு.க. வேட்பாளர் கோதண்டராமன் 953 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரம் 949 வாக்குகளும் பெற்றிருப்பது தெரியவந்தது. இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் கோதண்டராமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதேபோல் 26-வது வார்டில் தி.மு.க.- அ.தி.மு.க. கட்சி வேட்பாளர்களிடையே 37 வாக்குகள் வித்தியாசம் இருப்பதால் அவ்வார்டில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேவையில்லை என்று தேர்தல் பார்வையாளர் லட்சுமி முடிவு செய்தார். 
இதனால் அவ்வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பிரியா சக்திவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் கோதண்டராமன், ஜெயப்பிரியா சக்திவேல் ஆகிய இருவருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் பார்வையாளர் லட்சுமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேந்திரஷா வழங்கினார். 
அதன் பிறகே சுமார் 2 மணி நேரமாக நீடித்த பதற்றம், காரசார வாக்குவாதம், தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்து அங்கு சகஜ நிலை திரும்பியது.

Next Story